ஆரம்ப காலத்தில், பிரியாணி என்பது இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு செய்து உற்றார் உறவினர்களின் வீடுகளுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.
இதனால், முக்குக்கு முக்கு பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப் படுவதுண்டு.
மொத்தத்தில் பிரியாணி இன்றைய இந்தியாவின் தேசிய உணவாக மாறி விட்டது. இத்தகைய சுவையும், மணமும் கொண்ட பிரியாணி பிறந்த இடம் பாரசீகம் ஆகும்.
பாலைவனங்கள் நிறைந்த பாரசீகத்தின் இன்றைய பெயர் ஈரான்.
பாரசீகர்களின் பாரம்பரிய தொழிலான குங்குமப்பூவை, அண்டை நாடுகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்வதற்காக பாலைவனங்களை கடந்து பல நாட்கள் பயணப்படும் பாரசீகர்கள் கண்டுபிடித்தது தான் பிரியாணி ஆகும்.
தேவையானவை:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 3 (அரை நிலா வடிவம் போல நறுக்கவும்)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
அன்னாசிப்பூ - 2
கறுப்பு ஏலக்காய் - 2
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நெய்யில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும்)
கெட்டித் தயிர் - 200 மில்லி
இஞ்சி - பூண்டு விழுது - தலா 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 50 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
புதினா - ஒரு கைப்பிடி
கொத்த மல்லித்தழை - 2 கைப்பிடி
கேரட்- பெரியது 1
பீன்ஸ் - 30 கிராம்
உருளை - 1
பச்சைப் பட்டாணி - 30 கிராம்
கீரா வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 1
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (ஒரு டேபிள் ஸ்பூன் பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்)
அலங்கரிக்க:
ஃப்ரைடு ஆனியன் - 4 டேபிள் ஸ்பூன்
ஃப்ரைடு முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன்
திராட்சை (கிஸ்மிஸ்) பழம் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்த மல்லித்தழை, புதினா - சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தலா ஒரு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, சீரகம் போட்டு பொரிந்ததும், வெங்காயம் சேர்க்கவும்.
இதில் இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கியதும், தக்காளி, காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
புதினா, கொத்த மல்லித்தழை சேர்த்து சுருள வதங்கியதும், நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி போட்டு மிதமான தீயில் வதக்கி இந்த மசாலாவை தனியே எடுத்து வைக்கவும்.
காய்கறிகள் பாதி வெந்ததும் தயிர், எலுமிச்சை, உப்பு சேர்த்து வதக்கவும். மற்றோர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும்,
ஊற வைத்த அரிசியை வடிகட்டி சேர்த்து உப்பு, மீதம் இருக்கும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, சிறிது புதினா, கொத்த மல்லித்தழை சேர்த்து முக்கால் பாகம் வேக விட்டு வடித்து வைக்கவும்.
இனி, ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள மசாலாவை இரண்டு பகுதியாகப் பிரித்து எடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு மசாலா அதன் மேல் வெந்த பாஸ்மதி அரிசி, அதன் மேல் மசாலா, அதன் மேல் பாஸ்மதி அரிசி என்பது போல பரப்பி வைத்துக் கொள்ளவும்.
மூடியின் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடங்கள் வேக விடவும்.
பிறகு, மூடியைத் திறந்து, மீதம் இருக்கும் நெய் ஊற்றி, லேயர் லேயராக பிரியாணியை எடுத்து, அலங்கரிக்கக் கொடுத்தப் பொருள்களை கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.