பொதுவாக எல்லாரும் காற்று வாங்கத் தான் மொட்டை மாடிக்குச் செல்வார்கள். இந்த காற்றின் சுகமே தனி தான்.
நகர மயமாக்கலின் விளைவாக விவசாய நிலப்பகுதியின் அளவு குறைந்து கொண்டே வருவதுடன், அந்தப் பகுதிகளில் கான்கிரீட் காடுகளின் பரப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
விவசாய நிலங்களை அழித்து விட்டுக் கட்டிடங்கள் கட்டிய நமக்கு, கட்டிடங்களை அழித்து விவசாயம் செய்வது அத்தனை எளிதல்ல.
அதனால தான், இருக்கிற இடத்தை எப்படிப் பசுமையா மாத்தறதுன்னு முடிவு பண்ணினோம். அதோட வெளிப்பாடு தான் இந்த மாடித்தோட்டம். இதுக்கு மூலகாரணம் என் கணவரோட அண்ணன் தான் என்கிறார் அனுராதா.
அனுராதாவின் கணவருடைய அண்ணன் முத்து வெங்கட்ராமனை முழு நேரச் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று சொல்ல முடியாவிட்டாலும், தன்னால் இயன்ற அளவு சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்.
அந்த ஆசை நிறை வேறுவதுடன் ஆரோக்கிய உணவும் கிடைத்தால் அதைச் செயல்படுத்த யாராவது தயங்குவார்களா என்ன?
உடனே தன் எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுத்து விட்டார் முத்து வெங்கட்ராமன். மாடித்தோட்டம் அமைக்கும் முடிவோடு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தை அணுகினார் அவர்.
அங்கே அவருக்கு வேண்டிய வழிகாட்டுதலுடன் தோட்டம் அமைக்கத் தேவையான பொருட்களும் வழங்கப்பட, இனிதே உருவானது மாடித் தோட்டம்.
மண்ணில்லா தோட்டம், இவர்களுடைய இன்னொரு சிறப்பு. தொட்டி வைத்தோ, மண் பாத்தி அமைத்தோ இவர்கள் மாடித் தோட்டம் அமைக்கவில்லை.
தென்னை நார்க்கழிவிலிருந்து உருவாக்கப்படும் பல்வேறு அளவிலான கட்டிகளை வாங்கி வந்து, அவற்றில் செடிகளை நட்டிருக்கிறார்கள்.
இதைக் காயர் பித் (coir pith) என்று சொல்வார்கள். இது சதுரம், செவ்வகம், வட்டம் எனப் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் கிடைக்கும்.
இவற்றை வாங்கி வந்து, லேசாகத் தண்ணீர் ஊற்றினால் நன்றாக உப்பி, விரிவடையும். பிறகு அவற்றில் விதையை ஊன்ற வேண்டும். செடிகள் வளர வளரக் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றினாலே போதும்.
இவற்றிலிருந்து தண்ணீர் வெளியே கசியாது என்பதால் மாடித்தரை பாழாகும் என்ற கவலையும் இல்லை என்று சொல்லும் அனுராதாவின் வீட்டு மாடியில் பாலக் கீரை,
தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, கத்திரிக்காய், தக்காளி, வெண்டை, மிளகாய் ஆகியவற்றுடன் காலிபிளவரையும் பயிரிட்டிருக்கிறார்.
காலிஃபிளவர் எல்லாம் வளருமான்னு முதல்ல சந்தேகமாத் தான் இருந்துச்சு. ஆனா அருமையா வளர்ந்து ஆச்சரியப்படுத்திடுச்சு. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செடியைப் பயிரிடுவோம்.
ரசாயன உரத்துல விளைஞ்ச காய்கறிகளுக்கும் இயற்கை உரத்துல விளையுற காய்கறிகளுக்கும் இருக்கற வேறுபாட்டைப் பயிரிட்ட பிறகு அனுபவிச்சு புரிஞ்சுக்கிட்டோம்.
காய்கறிகளோட இயற்கையான மணமும் சுவையுமே வித்தியாசத்தைச் சொல்லிடும். அதைவிட அவை நஞ்சில்லாத உணவுங்கற மனநிறைவுதான் எங்க மாடி தோட்டத்தால கிடைச்ச மிகப் பெரிய பலன் - அனுபவித்துச் சொல்கிறார் அனுராதா.