உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது.
முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது. முட்டையை இடியாப்பத்துடன் செர்த்து சப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.
ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்றுமே ஆரோக்கியமானது. தமிழர்களின் ஒரு பாரம்பரிய காலை உணவு வகை தான் இந்த இடியாப்பம்.
காலையில் இடியாப்பம் செய்து மீந்து போய்விட்டதா.. கவலைய விடுங்கள். அதை அப்படியே மாலையில் முட்டை சேர்த்து மசாலா இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்தலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. 10 நிமிடத்தில் பஞ்சு போன்ற முட்டை இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யலாம். இன்று முட்டை இடியாப்பம் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் : .
இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்
முட்டை - 3
சின்ன வெங்காயம் - 50 கிராம்
நாட்டு தக்காளி - 3
பூண்டு - 6 பல்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை : .
ஒரு பாத்திரத்தில் லேசாக உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை பெரிய முட்டை அடையை போல ஊற்றி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய் தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுங்கள்.
கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள்.
நன்கு எண்ணெய் கசிந்து வரும் போது, மீந்து போன இடியப்பத்தை உதிர்தது நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள்.
இப்போது சூப்பரான முட்டை இடியாப்பம் ரெடி.