வாரம் ஒரு முறை சுரைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் வைட்டமின் சி, ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளது. எனவே இது உடலினுள் பல மாயங்களை உண்டாக்குகிறது.
இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இதயத்திற்கு நல்லது, எடை இழப்பிற்கு உதவுகிறது, தூக்க பிரச்சனையை சரி செய்கிறது, செரிமானத்திற்கு நல்லது.
சரி இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு வாய்க்கு ருசியான ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா?
அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு அட்டகாசமான ருசியில் குருமா செய்யுங்கள். இந்த சுரைக்காய் குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அற்புதமாக இருக்கும்.
இனி சுரைக்காய் கொண்டு சுரைக்காய் குருமா எப்படி? செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் : .
சுரைக்காய் - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
செய்முறை : .
முதலில் சுரைக்காயை கழுவி, அதன் தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு வெங்காயத்தைப் போட்டு சில நிமிடங்கள் வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் நறுக்கிய சுரைக்காய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி 7-10 நிமிடம் சுரைக்காய் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
சுரைக்காய் வெந்து கொண்டும் அதே சமயத்தில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் கசகசாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வேண்டுமானால் அரைக்கும் போது, 4-5 முந்திரியை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
சுரைக்காய் வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சுரைக்காய் குருமா தயார்.