முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது.
மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.
அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. குழந்தை யின்மைப் பிரச்னைக்கு முருங்கைக் கீரை மட்டுமின்றி, முருங்கைப் பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும். சரி இனி முருங்கைக்கீரை கொண்டு சுவையான முருங்கைக்கீரை வடை செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : .
கீரை - 1 கட்டு
உளுந்து - 200 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை : .
முதலில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அதனை தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது. கீரையை நன்றாக சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும்.
பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போட்டு எடுக்க வேண்டும். பின்னர் பொன்னிறமாக பொரிந்ததும் வெளியே எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் கீரை வடை தயார்.
இந்த வடைக்கு அரை கீரை, சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக் கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.